Thursday, February 24, 2011

நாயை நினைந்தழுதல்


நிலம் பிரிந்து போனவனின்

நெடுமூச்சிக்கப்பாலும்

முற்பிறப்பின் வினையொன்றில்

கரைந்துவிடும் மாயத்துள்

வாலைச்சுருட்டி வந்து

என்வீட்டு வாசலிலே

உமிழ் நீர் சொரிந்து நிற்கும்

உந்தன் விம்பந்தான்

இடிவிழுந்து இறுகிவிட்ட

இருதுதயத்தின் சுவர்களிலே

உன்வாயில் வழிகின்ற

உமிழ்நீராய் வியர்க்கிறது


விட்டுந்த வீட்டினுள்ளே

பூட்டிவைத்த பெட்டகத்துள்

பாட்டன் முப்பாட்டன்

பரம்பரைகள் போனபோதும்

கலங்காத கல்மனது

நீயென்ற ஐந்தறிவில்

நீர்த்திவலையாயிற்று


நிலம் பிரிந்த இரு தினத்தில்

அந்திக்கு அப்பாலே

விழுங்கணையில் உயிர் பிழைக்க

முகம் புதைய விழுந்தெழும்பி

ஊர் நுழைந்தேன் உன்பொருட்டு

பேயுறையுந்தெருவொன்றில்

முன்காலில் முகம்வைத்து

பார்த்தபடி படுத்திருந்தாய்

படு இருளில் கண்டவுடன்

தாவிக்குதித்தெழுந்தாய்

முனகி முனகியென்மேல்

பாய்ந்து நகம் பதித்தாய்

வந்து விட்ட பேருவப்பில்

மூச்செல்லாம் முட்டிவிட

நக்கி நக்கியென்னை

ஈரத்தில் குளிக்க வைத்தாய்

கண்பூளை காய்ந்த படி

ஒட்டிய உன் வயிறு

அடி மனது உறைய

என்னுயிரை உசுப்பியது


அரிசிகளை இறுத்தெடுத்து

அவிந்தும் அவியாமல்

கடைசிப்பசி தீர்த்தேன்

நடு நாக்கு வெந்து

தோலுரியும் படியாக

சுடு சோற்றில் பசி முடித்தாய்

ஊருக்கும் உனக்குமாய்

விடைபெற்ற அக்கணத்தில்

மூச்சிரைக்க ஓடிவந்து

வீரிட்டலறி ஊழையிட்ட

உன் குரலின் பாசைகளை பெயர்த்தால்

என்னோடு நீயும்

வருவதற்கு எத்தணித்த

மொழியொன்று இருந்திருக்கும்

அந்தப் பொழுதொன்றே

இன்னுமென் நடுநெஞ்சில்

குறுகுறுத்துக் கிடக்கிறது


நீமட்டும் வாய் பேசும்

வரம் பெற்று வந்திருந்தால்

நிலம்பிரித்த பாவியரை

திட்டி முடித்திருப்பாய்

குரல்வளையைப் பாய்ந்து

கடிக்க நினைத்திருப்பாய்

ஏதிலியுள் மூழ்கி

இற்று விட்ட வாழ்வினுள்ளும்

நினைவின் இடுக்குகளில்

என்னை வட்டமிடும் வால் சுருண்ட

நாய்க் குட்டியே


ஊர் பிரிந்து வாழ்கின்ற

அகதி முகாம் முற்றத்தில்

அம்மா கொட்டுகின்ற

பழஞ்சோற்றுச் சத்தத்தில்

ஓடிவந்து மொய்க்கின்ற நாய்களுக்குள்

உன்னுருவம் தெரியாதா என்றெனது

அடி மனது துடிக்கிறது


என்றோ ஓர் நாளில்

என் நிலத்தில் கால் பதிப்பேன்

அந்தக்கணத்தில் என்னை வரவேற்க

பறிபோன என்னூரில்

உக்கி உருக்குலைந்து உடலெல்லாம்

குட்டையென ஆகிவிட்டுப் போனாலும்

உன்னுயிரை எனக்காக

பற்றி வைத்திருப்பாய் என்றதொரு

ஆறுதலில் மட்டும்தான்

உக்கிய என்வாழ்வில்

உசும்புகின்ற உன்னினைவு

இடர் நிலத்தின் வலிகளுள்ளும்

இன்னும் வாழ்கிறது

என் பிரிய நாய்க் குட்டியே

No comments:

Post a Comment