Thursday, February 24, 2011

காதலி எழுதிய கடிதங்கள் - 1

என்னில் எல்லாமாகிவிட்ட காதலனுக்கு

வாழ்வு இற்று விட்ட பின்னும்

நீ இருக்கின்றாய் என்னும்

என்னுயிரை மீட்டுதருகின்ற செய்தி ஒன்றுக்காய்

இன்னும் செத்துவிடாமல் இருக்கும்

காதலி எழுதிக்கொள்வது

தீப்பிளம்ப்பாய் சுடுகின்ற ஒவ்வரு நிமிடங்களில்

ஓங்கியழ உரமுமின்றி உன்னினைவில் ஊனுருகி

உன்னுருவம் கண்களிலே மறையாதிருக்க என்று

தூங்காது விழித்திருக்கும் என்விதியை அறிவாயா

எதை நினைத்து அழுவதென்று

கண்களுக்கு தெரியவில்லை

எங்கென்று தெரியாதா எந்தன் தம்பிக்கா

தாலியிட்ட கணவனின்னும் மீண்டுவரா பெருவலியில்

துடித்தழும் என் அக்காக்கா

இத்தனைக்கும் மேலாக என்னுயிரென்று ஆகிவிட்டு

இன்னும் மீழாமல் இருக்கின்ற உந்தனுக்கா

இத்தனைக்கும் அழுதழுது கண்கள் இன்னும் ஓயவில்லை

ஆறாத பெருவலியில் அடிமனது துடித்தாலும்

மாறாத உன் நினைவே இன்னும் எனை

உயிர் வாழ வைக்குதடா

போர் கொண்டு போய்விட்ட என்வாழ்வின் நின்மதியை

நீவந்து தருவாயா என்று மனம் ஏங்குதடா

எங்கோ நீ இருக்கின்றாய்

என்னினைவில் துடிக்கின்றாய்

மீண்டு வந்தென்னை மார்பு தழுவி விட

மனம் ஏங்கி தவிக்கின்றாய்

என்றெல்லாம் அடிமனது எனக்குள்ளே

உரைக்கின்ற ஒன்றில்தான்

இன்னும் இந்த பிச்சை உயிர்

என்னில் ஒட்டிகிடக்கிறது

காற்றோடு கலந்துவிட்ட

உன் மூச்சுக்காற்றுத்தான் எதோ எந்தனுக்கு

தைரியத்தை கொடுக்கிறது

மாயக்குவளை

உலகத்தை புனைந்தவனை தேடிக்கொண்டிருக்கிறேன்

என்னை புனையும் குறிப்புக்காக

அந்த குயவன் புனைந்த உலகம் கண்ணாடியிலான

மாயக்குவளையாக என் கைகளில் இருக்கிறது

அதன் ஒவ்வரு இழைகளும் மிக நூதனமானவை

உறவு உயர்வு இரக்கம் பொருள் என்ற படி

மாயக்குவளையின் ஒவ்வரு இழைகளும் இப்படித்தான்

அதனுள் என்னை ஊற்றுகிறேன்

குவளையில் நிரம்பி வழிகிறது நான்

மாயத்துள் மாயமற்று இருக்கிறது எனது உயிர்

குவளையாகி களிக்கிறது வழிகின்ற நான்

எனது எதிர்பார்ப்பின் தூர்தலில்

இழைகள் சிதைய உடைகிறது குயவனின் குவளை

உள்ளிருந்து நிலத்தில் சிந்திய என்னில்

துளிகளாய் சிதறிக்கிடக்கிறது நான் ஊற்றிய நம்பிக்கைகள்

என்னை ஊற்ற ஊற்ற மாயக்குவளை உடைகிறது

குயவனின் குறிப்புகளுக்குள் புகுந்து

என்னில் மாயயை புனைகிறேன்

மாயக்குவளைக்குள் மாயயை புனைந்த என்னை ஊற்ற

உடையாமல் இருக்கிறது குவளை

குவளையில் வழிகிறேன் மாயத்தில் ஊறிய நான்

உலக இயல்பில் இசைதலில் இருக்கிறது

எனது இருப்பு

எங்கள் குழந்தைகள் அழுகிறார்கள்

அந்த குழந்தைகள் அழுகிறார்கள்

இதுவரை மீண்டு வராத அப்பாவுக்காக

அவர்களின் அம்மா வாசலை வெறித்துக்கொண்டிருக்கிறாள்

இடை விடாது அழுகிறது அவளின் கண்கள்

இணை பிரிந்து அழும் குயிலின் தகிப்பில் கிடக்கிறது

அவளின் மனம்

அநேகபொழுதுகளில் தற்கொலைக்கு துணியும் அவள்

பால் மணம் மாறாத குழந்தைகளின் முகத்தில்

உயிர்க்க வேண்டியிருக்கிறது

அந்த குழந்தைகள் எப்போதும் போலவே

சேமித்து வைக்கிறார்கள்

தமக்கு வழங்கப்படும் உணவின் பாதியை

வராமல் போன அப்பாவுக்கு

கடவுளின் குணம் அறியாத பிஞ்சுக் குழந்தைகள்

பிராத்திக்கிறார்கள்

அப்பா எப்போது வருவார் என்ற அவர்களின் கேள்வி

தாயை சாகடிக்கிறது

நாளைக்கு என்ற வார்த்தையையே

அவள் பதிலாக எப்போது உச்சரிக்கிறாள்

குழந்தைகளில் ஒருவன் அப்பாவை போலவே

தலை சீவிக்கொள்வதும் அவரின் உடைகளை

அணிவதுமாக இருக்கிறான்

அம்மா குழந்தைகளின் குறும்பை சேர்த்து வைத்திருக்கிறாள்

கணவன் வந்தவுடன் சொல்வதற்கென்று

எல்லா தடுப்பு முகாம்களிலும்

தன் கணவனின்முகம் தெரிகிறதா என

தேடித் தேடி களைத்துபோய் இருக்கிறது

அவளின் மனமும் கால்களும்

எனது தேசத்தின் கொடிய போர்

ஓவியங்களை கிழித்துக்கொண்டிருக்கிறது

பொம்மைகளை உடைத்து

குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்

காணாமல் போன அப்பா

மீண்டு வர வேண்டுமென்று

பிரார்த்தித்த படியே.

அப்பா

இன்னும் வரவில்லை 

என்னைக் கடந்த நான்

மெளனிக்கப்பட்ட எனது தேசியகீதத்தோடு

வனாந்தரப்பகல் ஒன்றில்

வெறிச்சோடிய மயானத்தெருவினூடு

எனது பிணத்தை அவர்கள்

சுமந்து சென்றனர்

வெற்றுடல் நிரம்பிய பெட்டியில்

எனது திமிரும் வைராக்கியமும்

பெருந்தோள் வீரமும்

தேசத்தின் மீதென் காதலும்

சென்னிறத் திரவமாய் சொட்டிக்கொண்டிருந்தது

சிதறிய துளிகள் ஒவ்வொன்றிலும்

நான் முளைத்தேன்

அதுவரை நிறங்களற்றிருந்த நான்

சிவப்பென காற்றில் கலந்து கொண்டிருந்தேன்

எல்லாமாகிக் கலந்த என்னை

வெற்றுடலாக்கிய வீரத்தைப் பற்றிய மாயக்கதைகளோடு

பலர் கடந்து சென்றனர்

எனது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது

சிறுவர்கள் என்னை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்

வானம் என்னை அழுதது

நான் வானத்தை சிரித்தேன்

போர்க்குணத்தோடு என் கவிதைகளை

ஒருவன் படித்துக்கொண்டிருந்தான்

எனது நாலைந்து சொற்களை காற்று

முதுகில் ஏற்றி அலைந்தது

எனது மீதிப்பகலை அந்திரத்து

மர்ம வெளிகளில் பூசினேன்

வெறித்துச் சோம்பிய முகங்களுடன்

வீதியில் குழுமிய கூட்டத்தினிடையே

நெரிசல்களை நீவி

அவர்கள் சுமந்து சென்ற என் உடலை

பாத்துக்கொண்டிருந்தேன்

எண்ண வெளிகளில் மூழ்கிப்பார்க்க

நேற்றுப் போல் இருக்கிறது தெருவில்

என்னைக் கடந்து சென்ற எனது பிணம்

கனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்


கோரத்தின் வன்மநெடி
இன்னும் விட்டகலாப் பொழுதொன்றில்
காலத்தை தலையில் சுமந்தலைந்த போராளி
நேற்றயபின்னிரவில்
என் கனவில் வந்தான்
நெடிய வலியனாய் பெருநிலத்தனாய்
பருத்த தோளனாய்
வீரத்தின் கதைகள் உலவிய காலத்தில்
அவனை நானறிவேன்

கணை பிடித்த கரம் பற்றி
ஆற்றாது என்னுள் அமுக்கி அழுகி
சினியடித்துக்கிடந்த
பெருஞ்சினத்தை பேதமையை
போர்வை பாய் நனைய
கண்ணால் ஊற்றாது ஊற்றிவிட்டேன்

தூய கரத்தால் துடைத்தான்
நீ அழத்தெரிந்தவன் அல்லது அழப்பிறந்தவன்
நான் போராளி
உன்னைப்போல் ஆயிரம் கண்களை
துடைக்கப் போனவன்
அதனால் அழமுடியாதென்றான்

தேற்றினான் பாதகரைத் தூற்றினான்
பாழ் விதியைத் தந்தவர் மீது
காறித் துப்பச்சொன்னான்
நான் வந்த செய்தி பற்றி
திருவாய் மொழியாதிரு என்றான்

உரையாடல் முடித்துப் போராளி புறப்பட்டான்
வாசல்வரை அவனை ஓடி மறித்தேன்
போக்கனத்து உயிர் என்னை
விட்டகலாப்பொழுதுக்குள்
நேரில் வருவீரா என்றுரைத்தேன்
என் அகதிக் கொட்டிலைப்பார்த்த
போராளியின் கண்கள் சிவந்தன
ஆயிரம் கண்களை துடைக்கச் சென்றவன்
விட்டழுத கண்ணீரில் விளித்து விட்டேன்

சுடலை ஞானம்


இவர்களுக்கு

சுதந்திரத்தின் மீதான பசி எடுத்த போது

நான் ஒரு வரலாற்றை ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தேன்..

நான் வரலாற்றுக்குள் இருந்த காலத்தில்

இவர்கள் பஞ்சனைகளின் கூரைகளில் இருந்தார்கள்

எனது காலத்தில்

எனக்காகவும் என்னனோடிணைந்தவர்களுக்காகவும்

பலர் வந்தனர்

பாரதி சொன்ன அக்கினிக் குஞசுகளைப் போலவும்

அர்ச்சுனனைப்போலவும்

எனக்காக வந்தவர் மீது

இன்று சுதந்திரம் பற்றிப் பேசுவோர்

கற்களை வீசினர் காறி உமிழ்ந்தனர் எனினும்

அவர்கள் சிந்திய ரத்தத்தில்

இவர்களுக்கான சுதந்திமும் இருந்தது

எனக்காக வந்தவர்

அவரவர் காரியம் முடித்து

யாரும் வரமுடியாப் பேரிருளுள்

வந்தவர் போயினர்….

எங்களின்காலத்தில்

கருத்துக்கள் மீது நித்திரை கொண்டபடி

நாக்கு வளிக்காமல் பேசித்திரிந்தவர்களுக்கு

இப்போது சுதந்திரப்பசி….

இவர்கள் வரலாறு ஒன்றை ஏப்பமிடும் காலத்தில்

இன்னும் சிலருக்கு சுதந்திரப் பசி எடுக்கும்.

காதலியுடனான கடைசிச் சந்திப்புக்கள்


பிரிவுக்கான

எந்தச்சாத்தியக் கூறுகளும் அற்றதாய்

நிகழ்ந்து போயிற்று நம் கடைசிச் சந்திப்பும்

இயல்புகளின் ஆக்கிரமிப்புக்குள்

வர்ணங்களற்ற கோடுகளை இறுக்கி

போலிகளின் முதுகில் அமர்ந்து

புண்ணகைத்த உதட்டின் அர்த்தங்களை

யூகிக்க முடியவில்லை


சந்திப்பின் பின்னரான தொலை துர உலையாடலில்

நீ மாறியிருந்தாய்

பிரிவுக்காண காரணங்கிளை ஒப்புவித்தபடி

தப்பித்தலின் இடுக்குகனில் இருந்து

அந்த உரையாடலை நிகழ்த்தியிருந்தாய்


உனக்கிருந்த சூழல் கோபுரங்களையும்

எனக்கு பள்ளத்தாக்குகளின் பயங்கரத்தில்

வெறுப்புக்களையும் விட்டிருந்தது

நீ என் காதல் கடிதங்களை எரித்த போது

நானோ எரிந்து போன ஊரின்

சாம்ல் முகடுகளில் இருந்தேன்

நீகவர்ச்சியான எதிர்காலத்தின்

தோழ்களில் தொங்கிய நேரம்

காவலரனொன்றில் துப்பாக்கிச் சன்னங்களில்

தப்பிக்கொண்டிருந்த தம்பியின் உயிரில்

நிலைத்திருந்தேன்

அடுக்குமாடியில்

நீ அடுத்த காதலை பற்றிச் சிந்தித்த போது

பதுங்குகுழியில் நாளை தொடர்பாக

மண்டாடிக்கொண்டிருந்தேன்

உனது மாடிவீட்டின் கனவின் முரணில்

எனது அகதிக் கூடாரங்கள் விரிந்து கொண்டிருந்தது

நீ பிரிதலின் பொருட்டு காலம்

வித்தியாசங்களின் மேல் சுழன்றது


உன்னதங்கள் உடைந்து

புள்ளியாய்ச் சுருங்கிய என் எச்சத்தின் மீது

இன்றுனது வாழ்வு தொடங்கியிருக்கும்

அருவருப்பூட்டும் முத்தத்தடங்கள்

என்னை நினைக்க வைக்கலாம்

கூடாரங்கள் மேவிய திசை ஒன்றில்

அவலத்தின் சுருக்கங்களை முகத்தில் பொருத்தி

பிடிமண்ணுமற்றலையும்

என் உயிர்ப்பிண்டம் பற்றிய கதையாடல்களை

யாரோ சொல்லியிருப்பர் அல்லது சொல்லுவர்

அந்தக் கணத்தில் காலத்திடம்

ஆயிரம் நன்றிகளைச் சொல்லு காதலியே

பதுங்கு குழியில் உயிர் பிழைத்த

என்னுணர்வு கொண்டு உட்சாகம் கொள்

காலம் வித்தியாசங்கள் மீதும்

பொருத்தப்பாடுகள் மீதுமே சுழல்கிறது

வீரம் உலவிய கடைசிப்பகல்


வக்கிரம் சூழ்ந்து கொள்ள

வன்னிப் பெருநிலத்தின் உக்கிரம்

குறைந்துகொண்டிருந்தது

நிணத்தின் நெடி படர்ந்த சினிக்காற்றைக் கிழித்து

இருட்டறைந்த தெருக்களில் முடிவுத்தடங்களைப் பதித்தபடி

உருண்டுகொண்டிருந்தன

விளக்கற்ற குருட்டு வாகனங்கள்

சத்தியங்களின் சிதைவில் அசாத்தியங்கள் நிகழ

ஈனத்தின் குரல்கள் மங்கி

விழுப்புண்களில் விறைத்தது பெருநிலம்

வந்தவர் தத்தம் பணி முடித்துப் போய்கொண்டிருந்தனர்

தீர்க்கப் போகும் கடைசி வேட்டுக்காக

ஒரு தமிழனின் துப்பாக்கி காத்துக் கிடந்தது

சபதங்களிலான பீஷ்மரின் அம்புப்படுக்கையில்

அதே சபதங்களால் பலர்

துரோகங்களின் நாறிய வாய்க்குள்

சரித்திரம் சரிந்து கொண்டிருந்தது

நாளைக்கான சகுனங்களற்றிருந்தன

போராடிக்களைத்து சாக்குறி தரித்த முகங்கள்

எக்கிய வயிறும் ஏறிட்ட பல்லுமாய்

பதுங்கு குழிகளுள் உறைந்து போயிற்று மனிதம்

இதுவரை நிகழாததும் இனி நிகழப்போகாததுமான

பெருவலியைச் சுமந்து

உப்பிப்பெருத்து சீழ் வடிந்த காயங்களில்

புழுவாய் நெளிந்தது சுதந்திரம்

மௌனங்கள் இறுகிய இரவு கழிந்து

ஒரு வரலாற்றை சப்பி ஏவறை விட்டபடி

இன்னுமொரு காலையை பிரசவித்தது காலம்

ஊமையாய் விடிந்த காலையின் நிசப்தங்களினூடே

அங்கொன்றுமிங்கொன்றுமாய்க் கேட்ட

துப்பாக்கி வேட்டுடன் அடங்கிற்று ஒரு வரலாறு

தீர்க்கப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களுள் ஏதோ ஒன்று

தமிழன் ஒருவனின் கடைசி வேட்டொலியாகவும்

வீரம் வீழ்ந்ததன் சமிக்ஞையாகவும் இருந்திருக்கும்.

ஆதியூழிக்குள் சஞ்சரிக்கிறது காண்டவம்


மந்திகள் கொப்பிழக்கப் பாயும் இருள்

சிறுவர்களின் மூத்திரத்தில் சுருப்பிய

குழிகளை மூடியும் அதற்கு மேலுமாய்

வானத்தைப் பெய்கிறது மழை

கால் இடுக்கில் கைகள் புக

குளிரில் சுருங்கிற்று

காலத்தில் தோற்ற வாலிபம்

ஏதிலிக் கூடாரத்தில்

போர்வைகளில் கசிகிறது ஈரம்

அநுபாலத்தை இழந்து

சயனத்தில் யனிக்கிறது பிரபஞ்சம்

தூர்ந்த காலத்தை கக்கத்தில் அடக்கி

மழையைக் கொல்லும்படி

காண்டவத்தில் எழுகிறது

ஆட்காட்டிப் பறவையின் குரல்

தொலைவுற்ற காலமொன்றில்

ஆட்காட்டிச் சத்தத்தில் நாய்கள் அடரும்

அம்மா நரைக்கண்களால் விழிப்பாள்

ஊர்ந்தூர்ந்து உருவம் வரும்

களைத்துண்ணும் கால்நீட்டி கண்ணயரும்

ஆட்காட்டிச் சொண்டுகள் அடங்காப்பொழுதுள்

பேரிருளில் பெருவுரு கரையும்

தூர்வுற்ற காலத்துக்கப்பால்

அர்த்தப்பிரமாணங்களற்று சுருள்கிறது

ஆட்காட்டும் பறவையின் சத்தம்

அம்மா நரைக்கண்களில் துஞ்சுகிறாள்

மழையைக் கொல்லத்தொடங்கிற்று தவளைகள்

அகாலத்துள் அமிழ்கிறது மனம்

ஆதியூழியுள் சஞ்சரிக்கிறது காண்டவம்

வேட்டுவச் சொற்களோடு புணருகிறாள்


இகம்பரமற்று சூரியன் குருடாகிக் குமைய

அபத்தத்தின் அரூபம் படிந்து

ஆதர்சியத்தை இழக்கிறது பெருவெளி

மூர்க்கத்தில் நேற்று வீங்கிய முலைகளில்

நீல வல்லிருள் படர

சோபிதங்களின் சுருக்கத்துள் சுருள்கிறது

அவள்தேகம்

சில்லீறுகளின் சத்தத்தில்

எரிந்த சிறட்டையின் கரியை மீண்டும்

அடுப்பில் போட்டு ஊதும் கிழவியின் சத்தம்

போர்வைகளில் ஊர்ந்து அவளின் ஆண்மாவைச் சுடும்

அடர் மழையொன்றுக்கு கறுப்புப்பிய மேகம்

கால்நீட்டும் கணத்தில்

திமித்த அவளின் மங்கலான உடலில்

துமிக்கிறது பயத்தின் மழை

வேட்டுவத்தின் சொற்களோடும்

மிருகத்தின் பற்களோடும்

அவளுக்காக சுறனையற்று விறைத்து நீழ்கிறது

வக்கிரத்தில் ஊதிய குறி

பல்லியைப் புணர படர்கிறது பாம்பின் நிழல்

அவள் வேட்டுவச் சொற்களோடு புணருகிறாள்

ஆடைகற்ற பொழுதுகளுக்கப்பால்

அவளின் வெட்கம் தற்கொலைத் தினவற்ற

வாழ்தலின் ஆசை மீதே சிவக்கிறது

தடுப்புக்காவல்களுக்குள் தொலையாதிருக்க

விதியின் மீது படுக்கை விரிக்கிறாள்

தொன்மத்தின் வன்மக்கனவு


பேய் இருட்டைப் பிழந்து நடுநிசியில்

கவிகிறது நிலவு

சலனங்களற்ற நிசப்தத்தின் கரைகளில்

சஞ்சரிக்கும் என் உயிர்

அமானுசியங்களின் சிதைவில்

தாயின் வற்றிய முலைகளை சப்பிய

குழந்தையின் முனகலில் சிதைகிறது


மூச்செறிந்துறங்கும் சொறிநாயின் சப்தங்கள்

சுவரில் படிந்து காற்றிறுகிய மரங்களில்

வழிந்தொழுகும் நிலவின் துளியை

நக்கி அடர்கிறது பல்லியின் நிழல்

விறைத்த ஆண்குறி சூடுதணியத் துலாவுகிறது

வன்மத்தில் மறியேறிய

கறுப்பு வெள்ளை மாட்டின் அலறலில்

அம்மா அரட்டப்பட்டாள்


கழுத்துச் சுருக்கங்களில் பிசிபிசுத்து வடியும்

வியர்வையின் நிமித்தம்

கலைந்த என் தூக்கத்தில் தொன்மங்கள்பற்றிய

தொடர்பறுந்த கனவு மீதியை அவாவுகிறது

பேய்கள் பற்றி அச்சுறுத்திய படி

அம்மா முதுமைக் கண்களால் அயர்கிறாள்

வறண்ட தொண்டை நனைத்து

தொன்மத்துள் புதையும் மனது

ஒட்டிய கனவின் மறுபாதியில்

ஓரு துப்பாக்கியின் குழல் சூட்டில்

கருகித் தீய்ந்து நாற்றமெடுக்கிறது

என்னினத்தின் கருமுட்டையும் விந்தும்

சூடுதணியத் துலாவிய ஆண்குறி சுருங்க

கறுப்பில் தோய்ந்த சப்பாத்தின் நிழலில்

மறைகிறது என் தொன்மம்


காலத்தின் புரியறுந்த நார்களில் தொங்கி

இறைஞ்சித் துடித்தது சுயம்

காறிச்செருமி பசியின் பொருட்டு

மழைக்காக வானம் பார்த்த

அப்பாவின் சத்தத்தில்

அம்மா மீண்டும் அரட்டப்பட்டாள்

தீபத்தைத் தின்னும் நரவதம்


நரவதத்தின் ஒப்பனைகளுள்

மூழ்கியது தீபாவளிக்காலம்

அடம்பிடித்த தங்கையின் கன்னத்தில்

உப்பாகிக் கரைந்தது புதுச்சட்டை

எட்டாத தூரத்தில் வெடித்து

அகதிக்கூடாரத்தின் கூரையில்

சாம்பல் படிய

தூர்ந்து போன பதுங்குகுழிக் காலத்தை

எண்ணும்படி அதிர்ந்தது

யாரோ விட்ட புஸ்வாணம்

இழந்து போன ஊருக்காகவும்

இன்னும் பலதுக்குமாய்

அகதி வாசலில் சிப்பியில்திரியிட்டு

நரகாசூரனைப் புனைந்து கொண்டிருந்தாள் அம்மா

இம்முறையும் தீபாவளி

ஊரில் ஒளிராமல் போன

அப்பாவித்தனமான ஏமாற்றத்தில்

மோட்டில் உறைகிறது

அப்பாவின் முதுமை எண்ணங்கள்

கடைக்கண் பார்வையற்றும்

கைவீசி நடக்கிறது காலம்

ஆயிரம் தீபங்களைத் தூர்த்தும்

அடியில் படிகிறது இருள்

ஆர்ப்பரித்து வெடித்து

அடங்கிச் சிதறிய பட்டாசிப் பேப்பர்களை

பொறுக்கிக் கொண்டாடினர் சிறுவர்கள்

நான் என்னைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன்

தீபத்தைத் தின்றபடி

நரவதத்தின் ஒப்பனைகளைக் கலைத்து

வல்லிருளில் படிந்தது

சிப்பியில் அம்மா புனைந்த

நரகாசூரனின் அரூபநிழல்

மாறா நிலவும் மறையா வலியும்


மானத்தின் வேரழுகி

வீழ்ந்து விட்ட பின்னாலும்

இருந்தென்ன இனியென்ற

இறுதிநிலை வந்தெய்து

சாவோடு துணியாத

போக்கனத்து வாழ்வதனுள்

சலித்துயிர்த்து இன்னும்

நாமும் இருக்கின்றோம் என்பதுவாய்

நீமட்டும் மாறாமல்

வாசலிலே வாய் நிறைய

பால் சொரிந்து வந்து நின்று

காய்கின்றாய் பெரு நிலவே


முன்பொருநாள் பால் வெளியில்

நீ பாத்திருந்த வேளையில்தான்

பாவியர்கள் கணையெறிந்து

பாட்டனும் அறியாத பாட்டன்கள்

வாழ்ந்து விட்டுப் போனதொரு

எங்கள் பொன்னகரை எரித்ததனை

நீ மட்டும் சாட்சியென

பாத்திருந்தாய் பெருநிலவே


நாய்களைப் போல் சாமத்திலே

நிலம் பிரிந்து போனதுவும்

ஊரெரிந்த கரும்புகையில்

உன் பால் வீதி கறுத்ததுவும்

எனக்கின்னும் நினைவுண்டு

நீ மட்டும் மறப்பாயா


வெண்ணிறத்தின் கூடாரம்

ஓரிடமாய்த் தரித்து நிற்க

கூடார வாசலிலே மல்லாக்கப் படுத்திருந்து

வாழ்வழிந்த பெருவலியை

கடைக்கண்ணில் கசிய விட்ட

அகதி முகாம்வாசலிலும்

வஞ்சகமே இல்லாமல்

நீ சொரிந்தாய் பெரு நிலவே


அனல் மின்னை ஆக்குதற்கு

ஆட்களற்ற வெளியிருக்க

தொன்மத்துள் வாழ்ந்து வந்த

தொல்குடியை நாய்களைப் போல்

நாலாண்டாய் நடுத்தெருவில் துரத்தி விட்டு

மின்சாரம் செய்கின்ற

பாவிகளைக் கண்டதுண்டா

பாவியர்க்கு நீ இரவில் பொழிகின்ற

பால் ஒளிதான் போதாதோ


ஆட்களற்ற திசையெல்லாம்

பார்த்து வரும்பெரு நிலவே

எங்களது திருநாட்டில்

நடக்கின்ற பெருங்கூத்தை

எங்கேனும் கண்டதுண்டா

கண்டு வந்து சொல்லாயா


மாறாது மறையாது என்றெல்லாம்

மனதுள்ளே பூட்டி வைத்த

எல்லாமே மாறிவிட்ட பின்னாலும்

நீ மட்டும்மாறாது வந்துதித்தாய்

பெரு நிலவே

மாறாத எல்லாமே மாறிவிட்ட பின்னாலும்

நீ மட்டும் மாறாது

வந்துதித்து என்ன பயன்


செத்தழியா காலத்துள்

சீரழிந்த வாழ்வதனை

விட்டகலும் மாயத்தை

அறியாமல் தவிக்கின்றோம்

இரக்கத்தின் குணமொன்று

உனக்கிருக்கும் என்றாகில்

உன் பால் ஒளியில் படு விசத்தை

கலந்தெம்மில் ஊற்றிவிடு

வக்கிழந்த வாழ்வழிந்து

பரபதத்துள் மூழ்கட்டும்

நாயை நினைந்தழுதல்


நிலம் பிரிந்து போனவனின்

நெடுமூச்சிக்கப்பாலும்

முற்பிறப்பின் வினையொன்றில்

கரைந்துவிடும் மாயத்துள்

வாலைச்சுருட்டி வந்து

என்வீட்டு வாசலிலே

உமிழ் நீர் சொரிந்து நிற்கும்

உந்தன் விம்பந்தான்

இடிவிழுந்து இறுகிவிட்ட

இருதுதயத்தின் சுவர்களிலே

உன்வாயில் வழிகின்ற

உமிழ்நீராய் வியர்க்கிறது


விட்டுந்த வீட்டினுள்ளே

பூட்டிவைத்த பெட்டகத்துள்

பாட்டன் முப்பாட்டன்

பரம்பரைகள் போனபோதும்

கலங்காத கல்மனது

நீயென்ற ஐந்தறிவில்

நீர்த்திவலையாயிற்று


நிலம் பிரிந்த இரு தினத்தில்

அந்திக்கு அப்பாலே

விழுங்கணையில் உயிர் பிழைக்க

முகம் புதைய விழுந்தெழும்பி

ஊர் நுழைந்தேன் உன்பொருட்டு

பேயுறையுந்தெருவொன்றில்

முன்காலில் முகம்வைத்து

பார்த்தபடி படுத்திருந்தாய்

படு இருளில் கண்டவுடன்

தாவிக்குதித்தெழுந்தாய்

முனகி முனகியென்மேல்

பாய்ந்து நகம் பதித்தாய்

வந்து விட்ட பேருவப்பில்

மூச்செல்லாம் முட்டிவிட

நக்கி நக்கியென்னை

ஈரத்தில் குளிக்க வைத்தாய்

கண்பூளை காய்ந்த படி

ஒட்டிய உன் வயிறு

அடி மனது உறைய

என்னுயிரை உசுப்பியது


அரிசிகளை இறுத்தெடுத்து

அவிந்தும் அவியாமல்

கடைசிப்பசி தீர்த்தேன்

நடு நாக்கு வெந்து

தோலுரியும் படியாக

சுடு சோற்றில் பசி முடித்தாய்

ஊருக்கும் உனக்குமாய்

விடைபெற்ற அக்கணத்தில்

மூச்சிரைக்க ஓடிவந்து

வீரிட்டலறி ஊழையிட்ட

உன் குரலின் பாசைகளை பெயர்த்தால்

என்னோடு நீயும்

வருவதற்கு எத்தணித்த

மொழியொன்று இருந்திருக்கும்

அந்தப் பொழுதொன்றே

இன்னுமென் நடுநெஞ்சில்

குறுகுறுத்துக் கிடக்கிறது


நீமட்டும் வாய் பேசும்

வரம் பெற்று வந்திருந்தால்

நிலம்பிரித்த பாவியரை

திட்டி முடித்திருப்பாய்

குரல்வளையைப் பாய்ந்து

கடிக்க நினைத்திருப்பாய்

ஏதிலியுள் மூழ்கி

இற்று விட்ட வாழ்வினுள்ளும்

நினைவின் இடுக்குகளில்

என்னை வட்டமிடும் வால் சுருண்ட

நாய்க் குட்டியே


ஊர் பிரிந்து வாழ்கின்ற

அகதி முகாம் முற்றத்தில்

அம்மா கொட்டுகின்ற

பழஞ்சோற்றுச் சத்தத்தில்

ஓடிவந்து மொய்க்கின்ற நாய்களுக்குள்

உன்னுருவம் தெரியாதா என்றெனது

அடி மனது துடிக்கிறது


என்றோ ஓர் நாளில்

என் நிலத்தில் கால் பதிப்பேன்

அந்தக்கணத்தில் என்னை வரவேற்க

பறிபோன என்னூரில்

உக்கி உருக்குலைந்து உடலெல்லாம்

குட்டையென ஆகிவிட்டுப் போனாலும்

உன்னுயிரை எனக்காக

பற்றி வைத்திருப்பாய் என்றதொரு

ஆறுதலில் மட்டும்தான்

உக்கிய என்வாழ்வில்

உசும்புகின்ற உன்னினைவு

இடர் நிலத்தின் வலிகளுள்ளும்

இன்னும் வாழ்கிறது

என் பிரிய நாய்க் குட்டியே

கடவுளும் மயிராண்டிக் கதைகளும்


முன்பு முப்புரம் எரித்த

மூத்த கதைகளுக்குள்

இற்றுவிட்ட சுவடிகளில்

இன்னும் உலவித் திரிகின்ற

மூலத்தின் திருவுருவே


எங்கள் முதுகுகள்

எரிந்த போதும் உன்

எக்கண்ணும் திறக்கவில்லை

ஓர் அசுரன் வந்துவிட்டால்

வில்லோடும் விடக்கணையோடும்

மண்மீது பிறப்பாயென்று

மாகதைகள் சொல்வதுண்டு

கொடுவெளியில் எம்மக்கள்

ஒன்றற்ல இரண்டல்ல

காலிழந்து கையிழந்து

குறையுயிரைக் காப்பதற்கு

பல்லாயிரம் பேர் கூவியழைத்தும் நீ

வில்லோடு பிறக்கவில்லை

உன் தாயென்ன மலடா

இல்லை கருத்தடைதான் செய்தாளா


மழைபொழிய கோவியர்க்கு

மலை பெயர்த்து குடைபிடித்த

உன் பெருங்கைகள்

வீடின்றி மரத்தின் கீழ்

கூடார ஓட்டைகளில்

மழை ஒழுகி வழிந்த போது

குடைகொண்டு நீழவில்லை

தேவர்களின் குரல் கொண்டு

எமக்கழவுந் தெரியவில்லை

மானிடர்கள் சொல்லிவைத்த

மயிராண்டிக் கதைகளுக்குள்

தூக்கம்கலையாது தூங்குகிறாய்

அது நிற்க...


மூலத்தின் பராபரமே…!

உன் படைப்பில் உள்ளது போல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்

செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும்

பிறந்திழைத்தேன் என் பெருமான்

உன் கணக்கில் சொல்லாத எங்கும் இல்லாத

ஈழத்தமிழர் எனும்

ஈனப்பிறப்பொன்றை எமக்கு

எங்கிருந்து

ஏனளித்தாய் சொல்லு….?

பாடைவரை படருகிற ஊர் நினைவு


ஊரே பெரு நிலமே

ஒப்பில் தாய் முலையே

உருப்பட்ட காலமொன்றை

எனக்கீந்த உயிர்ச்சுரப்பே

கிளட்டுவத்துள் தீர்ந்துவிடும்

வாழ்வினுக்கப்பாலும்

நீர்க்கமற நிறைந்து விட்ட

பெருந்தரையே

பாடை வரை உன்னினைவில்

ஊனுருகி உறுப்புகளில்

உயிர் பிதுங்கி வளிந்தொழுக

காலமெலாம் உனை

கவி எழுதிச் சாவதற்கா

என்னை நான்கைந்து சொற்களுடன்

உன்மீது பிறக்க வைத்தாய்


பாதாளம் வரை படர்ந்த

உன் கூடாரச் சிறகுகளுள்

தெய்வத்துள் பேய்களுள்

பெருவெறியர் கூட்டத்துள்

வாழும் தைரியத்தை உருட்டியெடுத்ததொரு

மனங்கொண்டு உருப்பட்டேன்


அண்டபகிரண்டம்

ஆட்களற்ற பெருவெளியும்

அகல வாய் திறந்து பரந்து கிடக்கையிலே

கற்கால வேடுவர்கள் வாழுகின்ற இத்தீவில்

உன் பொன்னிலத்தின் துண்டத்தை

பொருத்திவிட ஏன் துணிந்தாய்

இத்தீவில் உன்னுடம்பு

ஒட்டாமல் போயிருந்தால்

நானும் வந்திங்கு பிறப்பேனா

இன்பமே மயமென்று

பிரபஞ்சம் வழிகையிலே

அள்ளிப்பருக துளியும் மனமின்றி

என் வாலிபத்தை பெருவலியில் கரைப்பேனா


கடல் சூழ களனி வயல் காடு மலையென்று

பார்த்தவரை மலைக்க வைக்கும்

ரம்மியத்தில் நீயிருந்தால்

மண்பறிக்கும் சாதியிலே

வந்துதித்த பெருங்குடிதான்

உன்னைச் சும்மாதான் விடுவாரா

இல்லை கைதூக்கித் தொழுவாரா

தொடர் கணையில் எரித்து விட்டார்

சுடுகாடாய் மாற்றிவிட்டார்

உன்னில் பிரித்தெம்மைத் துரத்தி விட்டார்


அம்மா புதைத்த எந்தன்

தொப்புள் கொடியுந்தன்

மேனியிலே அறுகாகிப் படராதா

மூக்கு வாய் வழி புகுந்த

பூ மணக்கும் உன் புழுதி

நுரையீரல் சவ்வுகளில்

சுவராக எழும்பாதா


புனிதரின் கால் நடந்த

உந்தன் பொன்மேனி இன்று

பூதங்களின் கால் படர்ந்து

பேயுறைந்து கிடக்கிறது

மடி நிறையப் பிள்ளைகளை

பெற்று வைத்த உன் பிழைப்பு

இன்று மலடுகளைப் புணர்ந்த படி

மல்லாக்கப் படுக்கிறது 

இராணுவ நண்பனுக்கு எழுதிய கடிதங்கள் 1


ஆயிரத்துக்கும் மேற்றபட்ட

முரண்பாடுகளுக்கு இடையேயும்

ஏதோ ஒன்றில் குறைந்த பட்சம்

நட்பில் நிலைத்து விட்ட

இராணுவ நண்பனுக்கு


உன் மீது வெறுப்புகள் இருந்த போதும்

உன் தொடர்புகளற்ற காலத்தில்

உனக்கும் சேர்த்ததாகவே இருந்தது

என் அஞ்சலி

எனினும் இப்போது

நீ இருக்கிறாய் என்றறிந்திருக்கிறேன்

கொலைக்களைப்புகள் நீங்கி

உனது பிண முகம் மாறி

ஆளற்ற பொட்டல் வெளிகளில்

வனாந்தரங்களை வெறித்தபடி

இப்போது அரண் ஒன்றில் தனித்திருப்பாய்

அர்த்தமற்ற இலக்குகள் மீது

அப்போது நீ நீட்டிய துப்பாக்கியின் குறி

இப்போது வெட்கத்தில் தலை கவிழ்ந்து

நிலத்தில் உறைந்திருக்கும்

வெறுமைகள் சூழ்ந்த பெரு வெளி

உனக்குள் வினாக்களை

மட்டுமே தோற்றுவிக்கும்

உனக்கு குறி பார்க்க இனி யாருமில்லை

என்ற நிலையிலும் கூட

துப்பாக்கியுடன் இருப்பதே

உனது விதியாயிற்று


இராணுவ நண்பா

எல்லாம் முடிந்தாயிற்று என

பெருமூச்செறிந்திருப்பாய்

உனது மனச்சாட்சியின் கிளைகளில்

இப்போது துளிர்கள்

அதனால் உன்னை ஒன்று கேட்கிறேன்

நீ போரில் சாதனைகள் படைத்திருப்பாய்

குறி பார்த்து சுட்டிருப்பாய்

செல் மழையில் தப்பியிருப்பாய்

முன்னரண்களைத் தகர்த்திருப்பாய்

எதிரிகளை வீழ்த்தியிருப்பாய்

இவைகள் எனக்கு புதிதல்ல

இவற்றில் எனக்கு உடன்பாடுமல்ல

உனக்குள் சொல்ல முடியாமல்

குடைந்து கொண்டிருக்கும் சாதனைகளையே

அறிய விரும்புகிறேன்


என் பெண்களின் எத்தனை

சட்டைகளை கிழித்தாய்

உன் துப்பாக்கியில் விழும்

வெற்றுத் தோட்டாக்களைப் போல்

எனது எத்தனை அப்பாக்கள்

மண்ணில் வீழ்ந்தார்கள்

உன் செயல் பொருட்டு கதறியழுத

அம்மாக்கள் எத்தனை பேர்

என்னைப்போன்ற எத்தனை பேருக்கு

ஆண் குறிகளை வெட்டினாய்

நீ குண்டுருவிப் போட்ட

வீடுகளின் கணக்கென்ன

இவைகளுக்காக செலவழித்த

துப்பாக்கி ரவைகளை

எந்தக்கணக்கில் சேர்த்தாய்


இராணுவ நண்பா

இன்னும் ஒன்றைக் கேட்கிறேன்

ஆடைகளை உரிந்து

கைகளோடு கண்களையும் இறுகக்கட்டி

முழங்கால்களில் இருக்க வைத்து

புற முதுகில் மண்டைகளில் சுடத்துணிந்த

உன் சுட்டுவிரல் கணம் ஒன்றில்

உன் மனம் என்ன சொல்லியது

இல்லையெனில்

வெடிபட்டு வீழ்ந்தவர்கள்

புழுபோல சுருண்டு ஆவி பறி போகுமுன்பு

வாய் நிறைய ஏதோ

முணு முணுத்துப் போயிருப்பர்

மனச்சாட்சி உனக்கிப்ப வந்திருந்தால்

எனக்கு அதையாச்சும் சொல்லி விடு

Sunday, February 20, 2011

பரி நிர்வாணம்

பகல் காட்சிகளைப் புறக்கணித்து

உறங்கும் இரவுகளில்

ஓசைகளற்ற உயிரின் நிசப்தங்களில் ஏறி

வெறிச்சோடிய மனதில் எழும் அதிகாலைக் கனவுகள்

அபத்தங்களைச் சொரிகிறது


மழைக்கோடுகள் மண்ணில் மோதி முறிகின்ற

தடதடக்கும் ஓசையை உதாசினப்படுத்தி உறங்கிய

நேற்றைய அதிகாலையிலும்

கனவுக்குள் சஞ்சரித்திருக்கிறேன்

சிவப்பு நிறத்திலான இலைகளையுடைய

போதி மரத்தின் கீழ் சீடர்கள் புடை சூழ

சித்தார்த்தனுடன் இருந்தேன் இல்லையெனில்

அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறேன்


யாரும் சொற்களற்றிருந்தோம்

சீடர்கள் குருவின் குற்றேவலுக்குக் காத்திருந்தார்கள்

சித்தார்த்தன் உபதேசிக்கத் தொடங்கினான்

பஞ்சமா பாதகம் பற்றியதாகவே

அது இருந்திருக்க வேண்டும்

காமத்தை ஒழி என்ற

சித்தார்த்தனின் கருத்துக்களுக்கிடையே

வன் புணர்ச்சியில் ஒரு பெண்

கதறிக்கொண்டிருந்தாள்

சீடர்களில் ஒருவன்

இடையில் எழுந்து சென்றிருந்தான்


சிவப்பு நிறத்திலான போதிமரத்தின் இலைகள்

என் மடிமீது சொரிந்து கொண்டிருந்தது

சித்தார்த்தனின் நீண்ட பிரசங்கம்

பரி நிர்வாணம் பற்றியதாக அமைந்தது

உபதேசத்தின் முடிவில்

சீடர்கள் என் ஆடைகளை உரிந்தனர்

கைகளையும் கண்களையும் கட்டினர்

பரி நிர்வாணம் அடைந்தேன்

அப்போது சித்தார்த்தன் கொல்லாமை பற்றி

உபதேசிக்கத் தொடங்கியிருந்தான்

இலைகளெல்லாம் சொரிந்து விட

பரி நிர்வாணமாகியது போதிமரம்

கனவில் தப்பி விழித்தெழுந்தேன்

காலை ஒன்றுக்காக ஆடைகளை அவிழ்த்து

பரி நிர்வாணத்திற்குள்

மூழ்கிக்கொண்டிருந்தது இரவும்.

நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்


மழைக்காக தவளைகள் அழுகின்றன

அதன் குரல்களில் மரணம் வழிகிறது

அம்மா நீயும் அழுது கொண்டிருக்கிறாய்

மழையில் உறைந்த இரவின் ஆர்ப்பரிப்பை நீவி

எனக்குள் கேட்கிறது உன் குரல்


மழைப்பொழிவை தாங்காத

நம் அகதிக்கூடாரம்

அதன் இயலாமையின் ஓட்டைகளால்

அழுகிறது

உன்னிடம் இருக்கும் எல்லாப்பாத்திரங்களிலும்

கொட்டில் அழுதூற்றும் கண்ணீரை

ஏந்துகிறாய்

உனது கண்ணீரை நான்

எந்தப்பாத்திரத்தில் ஏந்த


எருமை மாடுகளுக்கு பிரியமான சகதியை

காலம் நமக்குள் திணித்திருக்கிறது

சேறும் சகதியுமான

நம் கூடாரத்துக்குள்ளும்

நீ இரவுக்கான உணவை

தயார் செய்கிறாய்

சோற்றில் உப்பாகிக் கலக்கிறது

உனது கண்ணீர்


மழைக்காலம் முன்பு போல்

என்னை மகிழ்விப்பதில்லை

நடுக்கத்தை விரும்பி ஓடி வந்து

இப்போதெல்லாம் நான்

உன் மடியில் சுருண்டு படுப்பதில்லை

அம்மா குளிரிலும் என்னுடல்

இப்போது வியர்க்கிறது

நிலத்தில் ஊரும் அட்டைகள் என்னில் ஊர்வதாய்

புளிக்கிறது என்னுடல்

மனம் மட்டும் சிறு கூதல் காற்றிலும்

பூச்சியப்பெறுமானத்தில் உறைந்து சுருழ்கிறது


அம்மா நீ அழுதுகொண்டிருக்கிறாய்

வெளிப்படாத உன் குரல்

தவளைகளின் சத்தத்தை மீறியும்

என்னை கொல்கிறது

பறிக்கப்பட்ட உனது நிலத்துக்காகவும்

மழைக்காலம் பறித்த உன் தூக்கத்திற்காகவும்

வானத்தோடு சேர்த்து நீயும்

ஐந்து மார்கழிகள் அழுதுவிட்டாய்

அம்மா நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்

கண்ணீரற்ற கண்களால்

நிலத்தை பறித்தவன் மீதும்

வீட்டை இடித்தவன் மீதும்

மழையின் மீதும் அழாதே

நீ அழ வேண்டியது என் பொருட்டே


உனது காலத்தை என்னிடமே தந்தாய்

எனது காலம் என்னிடம்

வெறும் சொற்களை மட்டுமே தந்தது

கையாலாகாதவனாய் வாழ்வைக் கரைத்தவனாய்

உனது காலத்தை சுமக்க முடியாத

வக்கற்ற வாலிபனாய்

வலி சுமந்து உன் முன்னே

நடைப்பிணமாய் திரிகின்ற

எனக்காக இனி அழுவாயா அம்மா

உனது மகனுக்காக மட்டும் இனி அழு

நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்

அரசனின் மரணமும் தேனீர்ச்சந்திப்பு


நிஜங்களை விட இப்போதெல்லாம்

கனவுகள் அழகானவை

வாழ்வின் புதிர்களெல்லாம்

கனவுகளில் மட்டுமே அவிழ்கின்றன

நேற்றய கனவில் ஒரு அரசன் இறந்து கிடந்தான்

மரணச்சடங்கில் நானும் இருந்தேன் என்பதால்

என்னில் அவன் தொடர்புபட்டிருந்திருப்பான்

உயிரோடிருந்த போது அவனைப் பற்றி

பெருங்கதைகள் உலாவின

அவனது கைகள் மிக நீளமாக இருந்தது

நிலங்களை பறித்தான்

பூர்வீக குடிகளை துரத்தினான்

தனது சேனையால் ஒரு இனத்தினை அழித்தான்

கால்களை முடமாக்கி விட்டு

பாலமமைத்தான் வீதிகளை செப்பனிட்டான்

சொத்துக்களை சேர்த்தான் இப்படி

ஏகப்பட்ட கதைகள்

இவற்றில் உண்மையில்லை

மரணத்தின் பின்

அவது கைகளில் எதுவுமிருக்கவில்லை

சுடலைக்கு அவனை கொண்டு சென்றனர்

விறகுகள் அடுக்க சாம்பலானான்

பறித்த நிலங்களில்

ஒரு துண்டும் அவனுக்கில்லை

புதிர்கள் அவிழ கனவு முடிந்தது

அதிகாலைத் தேனீர்ச்சந்திப்பில்

நண்பர் ஒருவர்

என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்

எனது அரசன் இப்போது

நிலங்களை பறிப்பதாகவும்

வீதிகளை செப்பனிடுவதாகவும்

நான் தேனீரை மிக விரும்பி

சுவைத்துக் கொண்டிருந்தேன்

இராணுவ நண்பனுக்கு எழுதிய கடிதங்கள் - 2


கடிதங்களில் உன்னை காயப்படுத்துவது

எனது நோக்கங்களில் ஒன்றல்ல

உனது காக்கியுடையும் துப்பாக்கியும்

எனக்குள் வெறுப்பையே ஏற்படுத்துகிறது

அவற்றில் நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்

உனது கையில் இருக்கும் அதை பார்க்கும் போது

எனது உறவுகளின் அழுகுரல் மட்டுமே கேட்கிறது


உனது வறுமை துப்பாக்கியை ஏந்த வைத்ததாக

முன்பொருமுறை சொல்லியிருக்கிறாய்

அப்படியாயின் நீ நிகழ்த்திய வகைதொகையற்ற

கொலைகளும் அதன் பொருட்டே இருந்திருக்கும்

நீ சிந்தவைத்த தமிழ் ரத்தங்களில்

உனது வறுமை கழுவப்பட்டிருப்பின்

உன்னால் கொலையுண்ட எனது உறவுகள்

சொர்க்கத்தையடைய பிராத்தி நானும் பிராத்திக்கிறேன்


இப்போது நீ விடுமுறையில் அடிக்கடி

சென்று வந்திருப்பாய்

நான் செல்ல எனக்கு ஊரில்லை வீடுமில்லை

உனது அரசன் எனது நிலதைப்பறித்தான்

நானும் நீயும் வேறானவர்கள் என்பதை

உனது அரசனே அடிக்கடி உச்சரித்துக்கொண்டிருக்கிறான்

நீ விடுமுறையில் கொண்டுசென்ற பொருட்களில்

எனது வீட்டிலிருந்தும் ஏதாவது இருந்திருக்கும்

எனது ஊரில் இருந்தே உன்கடிதம்

முகவரியிடப்பட்டிருந்தது

அதனால் முடியுமெனில் எனது வீட்டுக்கு

சென்றுவருவாயா


நெடு வீதியில் முச்சந்தியொன்றில்

நெட்டென வளர்ந்த நிழல்வாகை மரமுண்டு

அதன் அருகே பாளடைந்த

பிள்ளையார் கோயிலின் பின்னால் இருக்கும்

இரண்டாவது வீடு என்னுடயது

பழைய வீடுதான்

முன்சுவர் இடிந்துகிடப்பதாய் அறிந்தேன்

சில வேளை நீயே குண்டுருவிப் போட்டிருப்பாய்

எனது வீட்டை சுற்றிப்பார்

மறக்காமல் எனது முற்றத்தில்

ஒரு பிடி நிலத்தை அள்ளி பொதிசெய்து அனுப்பு


உனக்கும் தெரியும் அது வெறும் மண்ணல்ல

எங்கள் உயிர் எங்கள் வாழ்வை

அந்தமண்ணுக்காகவே இழந்தோம்

பல்லாயிரம்பேர் மண்ணை உச்சரித்தே மாய்ந்தார்கள்

அகதிமுகாமில் பிறந்த எனது சித்தியின் மகன்

தனது ஊரைப்பற்றி இப்போது அடிகடி என்னிடம் கேட்கிறான்

சம்பூர் எப்படியிருக்கும் அதன் நிறமென்ன

ஏன் அதை பறிகொடுத்தீர்கள்

இப்படி கேள்விகளால் என்னைத் துளைக்கிறான்


இப்போது எனது கவலை

எனது மகன் என்னிடம் கேட்கப்போகும்

இதே கேள்விகளைப் பற்றியதுதான்

அதனால் நீ அனுப்பும் எனது பிடிநிலத்தில்தான்

எனது பூர்வீகத்தின் முகத்தையும்

எனது புனித நிலத்தையும்

அவர்களுக்கு காட்டவேண்டும்

உனது அரசன் பறித்த

எனது பத்தாயிரம் ஏக்கர் நிலத்திலிருந்து

ஒரு பிடி நிலத்தையாவது பொதிசெய்து அனுப்பு

காலத்தைத் தோற்றவனின் சாட்சியங்கள் 1


காலம் என்னை தனது கூண்டில் நிறுத்தி

சாட்சியத்தைத் திணிக்கிறது

எனது கண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது

இது என்னினத்தின் முதுமைகளின் பங்கு

மழைவிட்ட பின்பு இலையில் தொங்கிக்கொண்டிருக்கும்

மழைத்துளி ஒன்றின் கடைசி நம்பிக்கையாய்

கூன் விழுந்து குருடு தட்டிய காலத்திலும்

விடுதலைக்காக காத்திருந்த தாத்தாக்களே பாட்டிகளே

இன்று உங்களுக்காக அழுகிறேன்

நீங்கள் வடித்த முதுமைக் கண்ணீர்

என்னை சுடுகிறது என்னை சபிக்காதீர்கள்

கழியாமல் இருக்கும்

என் மீதிக்காலத்திற்காக பிராத்தியுங்கள்


நீங்கள் துணியாத ஒன்றிற்காக நாங்கள் துணிந்தோம்

உங்கள் தவறுகளைச் சரி செய்வதாகவும் அது இருந்தது

உங்கள் பிள்ளைகளும் பேரர் பேத்திகளும்

கண்முன்னே வீழ்ந்தபோதெல்லாம்

அவர்களின் ரத்தச்சிவப்பில் விடியலின் வானம்

சிவந்து கருக்கொள்வதாய் தேற்றிக்கொண்டீர்கள்

அடிமைக்காற்றில் அழுக்காகிப்போன

உங்கள் சுவாசப்பையை உயிர் அகலும் காலத்துள்

ஒருநொடிப் பொழுதேனும்

சுதந்திரக்காற்றை மூச்சுமுட்ட உள்ளிழுத்து

கறைச்சுவரை கழுவி விட

நீங்கள் காத்திருந்ததில் நியாயமிருக்கிறது

உங்களில் விழுந்திருக்கும்

நிமிர்த்தமுடியாத கூனைப்போலவே இருந்தது

எங்கள் விடுதலை

இருந்தும் தியாகத்தை சொரிந்தோம்

ரவைக்கூடுகள் காலியாகும் வரை இருந்தது

எங்களின் நெடும் பயணம்


யாரிடமும் கையேந்தாத வைராக்கியத்தை

பாலுடன் ஊட்டியது நீங்கள்

அதனால்தான் எங்கள் விடுதலை கையேந்தாதிருந்தது

எம்மில் விழுந்திருக்கும் போரின் காயங்களை விட

உங்களில் விழுந்த வாழ்வின் காயங்கள் வலியதுதான்

ஊரிழந்து மனையிழந்து கூடாரம் ஒன்றிற்குள்

சுருண்டு படுத்தபடி நீங்கள் விடும்

பெருமூச்சின் வெம்தணலில் அநீதி கருகட்டும்

ஊர்செல்லும் காலத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து

உயிர் பிரிந்து சென்று விட்ட உங்களைப்போன்ற

மூப்புற்ற ஆன்மாக்களின் பரிதாபமே

அடி நெஞ்சில் கனக்கிறது


எங்களின் முதுமை எங்கள் மகன்களிடம்

கண்ணீரை பரிசளிக்கக் கூடாது என்பதற்காகவே

இத்தனை பாடுபட்டோம்

உங்கள் முதுமை எம்மை மன்னிக்கட்டும்

நாங்கள் மனிதர்களிடம் தோற்கவில்லை

காலத்திடம் தோற்றோம்

எங்கள் தோல்வி

எங்களின் இயலாமைகளில் இருக்கவில்லை

காலத்தின் இயலுமைகளில் இருந்தது

தண்ணீர் தேசம்


போரின் தீக்காயங்கள்

இன்னும் ஆறாத எங்கள் தழும்புகளில்

நீரின் காயங்கள் சுடுகிறது

பேயென பெய்கிறது வானம்


மனங்களை ஈட்டியின் கூர்களைக் கொண்டு

குத்திக் கிழிக்கிறது மழைக் கால்கள்

வானம் குளிரில் நடுங்குகிறது

அதன் பொத்தல்களை மூடிவிட

முகில்கள் அலைகின்றன

நீரின்றி அமையாத உலகில்

மூழ்கி மூச்சித்திணறுகிறது

எங்கள் இயலாமை

காகிதக்கப்பல் விட மனமற்ற சிறுவர்கள்

தாய்ச்சூட்டில் சுருள்கிறார்கள்

நீ தண்ணீர் தேசத்தை பாத்திருக்கிறாயா ?

மூக்கு முட்ட மூச்சித்திணறியபடி

நான் இப்போது பார்க்கிறேன்


மண்ணும் சபித்து மரத்தால் விழுந்த

எம்மினத்தை

வானும் சபிக்க மழையேறி

மிதிக்கிறது

வீட்டின் பொருட்களையும்

முடிவுற்ற எங்கள் கனவுகளையும் முதுகில் ஏற்றி

ஊரூராய் அலைகிறது வெள்ளம்


உயர்த்தப்பட்ட விளம்பர பலகைகளும்

மின்சார கம்பிகளும்

நகரின் இருப்பைக் காத்துகொண்டிருக்கிறது

பாலின்றி குளிரில் விறைத்த

முலைகளை சப்பி

விறைக்கின்றனர் குழந்தைகள்

பெருவெள்ளத்தில் திடுக்கிட்டழுகிறார்கள்

பிஞ்சுகள்

காலாவதியான முதியோரின் உடல்சூடு

வெள்ளக்குளிரில் நம்பிக்கையற்ற

தீர்மானம் ஒன்றை

நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது

தொடர்பற்று துண்டிக்கப்பட்ட நீர் வெளிகளில்

நாளைக்காய்ப் பிராத்திக்கிறார்கள் மக்கள்


எந்த சலனமும் அற்று தூறுகிறது வானம்

குளங்களை உடைக்கிறது நீரின் போர்க்குணம்

பல மடங்கு விலை உயர்வில் கிடைக்காத

உணவு பொருட்களை

எண்ணி விம்முகிறது ஏழைகளின் மனது

உயிர் காக்கும் நீர் ஊன் அழித்துப் பாய்கிறது

ஈரத்தரைகளில் மூட்ட மூட்ட அணைகிறது நெருப்பு

முதுகில் பொருட்களை ஏற்றும் பெருவெள்ளம்

பிணங்களையும் சுமக்கிறது

இருப்பதை அவிக்க

ஒரு வேளை மட்டுமே நிறையும் வயிறு


எப்போதும் மழைக்காக வானம் பார்க்கும் கண்கள்

இப்போது தொலைந்த சூரியனை தேடுகின்றன

மிக இயல்பாய் காட்சியளிக்கிறது தண்ணீர் தேசம்

எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல்

எப்போதும் போலவே

அதன் பாட்டில் பெய்கிறது மழை

மனதின் துயர்மிகு பாடல்


வாழ்வின் கரைகளில் சதா மடிந்து

அழுதுயிர்கின்றன அலைகள்

நீளமாய் இன்னும் நீளமாய் இடையறாது

என் மனதில் ஒலிக்கிறது துயரின் பாடல்

அலக்கழிக்கப்பட்ட காற்றின் சொற்களில்

மொழிதல் ஏதுமற்று நனைகிறேன் நான்

முகமற்றிருக்கின்றன காலமும் காற்றும் நானும்

ஓய்வற்று வாழ்வை மோகித்தழுகிறது என் பாடல்

மெளனத்தை யாரோ என் மீது பூசி விட்டு போகிறார்கள்

அதை உடைத்து பிரவாகிக்கிறது உள்ளிருந்து உயிர்

வானம் நிறமற்றிருக்கிறது என்னில்

மனதில் எழும் நீளப்பாடல்களில் ஒன்று

நாளை பற்றியதாக இருக்காலாம்

வெற்றுடலை சுமந்தலையும் சலிப்பில்

விறைக்கிறது குதிகால்களில் ஒன்று

நான் என்னும் பிண்டம் தொலையாதிருக்க

சொற்களைத்தேடுகிறேன்

தேடித்தொலையும் விதி இன்னும் கைப்படவில்லை

காலத்தின் முடிவுறாக்கரைகளில்

அங்கொன்றும் இங்கொன்றுமாக சுவடுகள்

சுவர்க்கடிகாரத்தின் முட்களில்

நொடி நொடியாய் கசிகிறது

அள்ள அள்ள தீர்ந்து போகாத கனவு

சிலந்தி பூச்சியை போல காலம்

மிக இயல்பாய் வலைகளை நெய்துகொண்டிருக்கிறது

சிக்கிவிடாதிருக்கும் சூக்குமங்களில்

சிக்கிக்கொண்டிருக்கிறேன் நான்

இயல்பற்றிருத்தலின் சாத்தியம்


அதீத பிரயத்தன முயல்தலுக்குப் பின்னும்

இன்னும் என் கைப்பிடிக்குள் சிக்கிவிடாதிருக்கிறது

மனம் என்னும் மாயத்திரள்

கட்டளைக்கு கீழ்படிதல் என்னுமியல்பற்று

தன்னுள் வசப்படுத்தி அதன் பாட்டில்

என்னை இழுத்தலைதலில் அதற்கிருக்கும் தனிப்பட்ட

பிரியத்தைக் காண்கிறேன்

இருத்தல் மீது விருப்பைச் சொரிவதும்

முட்தரைகளில் என்னை உலாவ விடுவதும்

அதன் ஆசைகளில் ஒன்றென்ற மொழிதலின் சாத்தியம்

பெருக்கெடுத்துக் கொண்டேயிருக்கிறது

ஈக்கிலில் சுருக்கிட்டுப்பிடித்த வேலி ஓணானை

கொண்டாடும் குழந்தைகளின் தெருக்களை

ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்

வனாந்தர வெளிகளின் கற்பாறைகளில் என் எழுத்துக்கள்

பொறிக்கப்படுகின்றன

முற்றுமிழந்திருத்தல் என்பது இரவுகளில் மட்டுமே

வசப்பட்டிருக்கிறது

ஊர்கள் எரிந்து மணக்கும் சாம்பல் முகடொன்றுக்குள்

என்னை ஒருவன் புதயலாய்த் தோண்டுகிறான்

நான் இன்னும் நானாக இருக்கிறேன் என்னும்

மாயைக்குள் இருந்து அவன் விடுபடவில்லை

எப்போதோ எரிந்து போன நான்

அவனிடம் நழுவி சாம்பலாய்

காற்றில் கலந்து கொண்டிருக்கிறேன்

கனவுகள் + கற்பனைகள் = பூச்சியம்


சொல்லாது போன சொற்களை

சேகரிக்கிறது தனிமை

நிலுவையில் இருக்கும்

பாதிச்சொற்களில் பயத்தின் நெடி

இன்னும் மறையவில்லை

மூடியற்ற என் கனவுக் குடுவையினூடு

வழிகின்ற எனது விம்பங்களில்

பரிதாபத்தின் தோரணை

அப்பிக்கிடக்கிறது

பினாத்தல்களின் சுதந்திரத்தில்

லயிக்கிறது மனது

தீராத பக்கங்களில் கலக்கமேதுமற்று

நிரம்பிக் கொண்டிருக்கின்றன

விடயற்ற கேள்விகள்


தீர்வுகளற்ற முடிவுறா

நெடும் பயணத்தின்

சிராய்ப்புத் தழும்புகளில்

மறைந்துகொண்டிருக்கும் எனது

சூரியோதயத்தின் மீது

நம்பிக்கையற்றிருக்கிறது பகல்

தனித்திருத்தலின் சாத்தியம்

அதிகரிக்க அதிகரிக்க

உடலற்று வான வெளிகளில்

நீந்துகிறது உயிர்


ஒவ்வொரு காலையும்

அதே நம்பிக்கயுடன்

நான் ஏந்தும் எனது

பிச்சை பாத்திரத்தின் மீது

விரல் பதிக்க துணிவற்றிருக்கிறார்கள்

சோறூட்டும் போது அம்மா சொன்ன

கதைகளில் வரும் தேவதைகள்


உயரத்தில் பறக்கும்

இனமும் மொழியுமற்ற பறவை ஒன்று

ஆயிரம் விடைகளோடு

உதிர்த்துவிட்டு போகும் இறகுகளில்

நிறைகிறது

தேவதைகளின் கண்களில்

அகப்படாத பிச்சைப் பாத்திரம்

சாம்பல் படியும் இரவு


போர்வைக்குள் வினாக்குறியைப்போல

சுருண்டுகிடக்கும்

என் உடல் சூட்டின் கதகதப்பில்

இரவு ஒழிந்துகொள்ள எத்தனிக்கிறது

நகரம் எரிந்து

காற்றில் படிந்த சாம்பல் படிமங்கள்

பகலை விடவும் இரவுகளில்தான்

உடலை மூடிக்கொள்ளும்படியாக படிகின்றன

நாசியில் புகும் துகள்களில் எல்லாம்

எனது தொன்மத்தை நுகர்கிறேன்

அவற்றில் வார்த்தைகளற்ற

பல்லாயிரம் குரல்கள் நிறைவேறாத வாழ்வை

ஒரு சாகரத்தைப் போல

ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன


ஓசயற்ற ஒவ்வரு நடு நிசி நிசப்தத்திலும்

ஒரு கனாக்காரன் மீதிக்கனவுகளுடன்

தன்னை என் மீது எழுதிவிட்டுப் போகிறான்

செவிப்பறைகளில் இடிபாடுகளின் சத்தம்

இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது

கற்குவியல்களுக்குள்

தொலைந்து போன நான்

தேடிச்சோர்வுற்றும் எனக்குக் கிடைக்காதிருக்கிறேன்


காலம் என்னைச் சூதாடியிருக்கிறது

நாடு நகர் தோற்றாயிற்று

பணயத்திற்கு என்னிடம் பாஞ்சாலியில்லை

அதனால் கண்ணன் வரப்போவதுமில்லை

நீயும் நானும் நினைப்பது போலில்லை காலம்

இரவும் அப்படியே


நீ இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறாய்

கண்ணகி திருகிய முலையில்

இன்னும் மதுரை எரிந்துகொண்டிருப்பதாய்

உன்னைப் பொய்யன் என்று நினைக்காமல்

வேறென்ன செய்ய

எனது நூற்றுக்கணக்கான

பத்தினிப்பெண்களின் மார்புகள்

அறுத்தெறியப்பட்ட போதும்

இன்னும் பற்றிக்கொள்ளாதிருக்கிறது

எனது தேசத்தில் நெருப்பு

தொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்


காதல் கசிவுகள் அற்று

பிரியத்தின் நிழலும் படராத

நெருஞ்சி வெளியென்றிருக்கும் என்னில்

நேசிப்புக்குரியவனாகிக் கொண்டிருக்கும்

தூர தேச நண்பனே


பருவகாலப் பெயர்வில் வந்தமரும்

பெயரறியாப் பறவையைப்போல அனுமதியற்று

என்னில் கூடு கட்டியிருக்கிறாய்

தூர்ந்து போன என் தெருக்களை

திரும்பிப்பார்க்கிறேன்

நீ முளைதுக்கொண்டிருக்கிறாய்

நம் தொடர்புக்கான அசாத்தியங்களின்

ஆயிரத்தெட்டுக் காரணங்களுக்குள்ளும்

என்னிலும் உன்னிலும் ஓடுகின்ற

ஏதோ ஒரு இழைக்கயிறு

நம்மை பின்னிக்கொண்டிருக்கிறது

நீ என் நம்பிக்கைக்குரியவனாகி விட்ட பிறகு

உன்னிடம் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள

மனதின் ஆழத்தில் கிடக்கிறது ஆயிரம் கதைகள்


நீ எனக்கும் சேர்த்தே தோற்றாய்

எனது தோல்வியும் உனக்கும் சேர்த்தே இருந்தது

நமது தேசம் இன்னும் மாறவில்லை நண்பா

நீ விட்டுச்சென்றதைப் போலவே

இன்னும் இருக்கிறது

சில விரும்பத்தகாத ஏற்பாடுகளுடன்


நம் தெருக்கள் நீ நினைப்பது போலில்லை

நாய்கள் அடங்கும் சத்தத்தில் இருந்து

இன்னும் அவை மீளவில்லை

வெளியில் ஓய்ந்துவிட்ட சத்தங்கள்

மனதில் ஆர்ப்பரிக்கத்தொடங்கியிருக்கிறது

வெளி உடலில் சாவதிலும் கொடியது நண்பா

மனதால் செத்துக்கொண்டிருப்பது


நிலாக்காலத்தில் கைவீசி நடந்த தெருக்கள்

தொலைந்துவிட்டதாய் உணர்கிறேன்

தூரிகையற்ற ஓவியனைப்போல

வெற்றுத்தாள்களில்

என்னை பிரதி செய்ய முயல்கிறேன்

கற்பனைகள் சிதைய சிதைய

தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு

மீண்டும் கோட்டைகளைக் கட்டுவதில்

மனம் வசப்பட்டிருக்கிறது

உண்பது உறங்குவது இவையே

இன்னும் பறிபோகாமல் இருக்கிறது


எனது தேவதைக்கிராமம் செம்மண் வீதி

மூச்செறிந்து இளைப்பாறும் முற்றம்

என எல்லாம் தொலைந்தாயிற்று

முன்பிருந்தவற்றில் எதுவுமில்லை நண்பா

நீச்சலடித்த வில்லுக் குளம்

தூண்டல் மீன் பிடித்த தோணாப்பாலம்

காதல் தேடும் காளி கோயில்

இப்படி எதுவுமில்லை


உன்னைப் போலவே பரிச்சயமாகிவிட்ட

தோழி ஒருத்தி

நான் புண்ணியம் செய்த நாட்டில் வாழ்வதாய்

என்னை பரிகசிக்கிறாள்

என் இருத்தல் விருப்பத்தெரிவுகள் அற்றது என்பதை

அவளிடம் எப்படி புரியவைக்க

பார்த்தாயா நண்பா

நீ நினைத்தது போல் எதுவுமில்லை


நீ இன்னொரு தேசத்தில் இருந்து

உன் தேசத்தை எண்ணி அழுகிறாய்

நான் எனது தேசத்தில் இருந்தே

அதை எண்ணி அழுகிறேன்

அன்னியக்காற்றை சுவாசிப்பதாய்

நீ இன்னொரு தேசத்தில் இருந்து குறுகுறுக்கிறாய்

நான் எனது தேசத்தில் இருந்து கொண்டே

அப்படி உணர்கிறேன்